தம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள் – மாவீரர் நாள் 2017 ஒக்‌ஷ்பேட்

தம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள் – மாவீரர் நாள் 2017 ஒக்‌ஷ்பேட்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்

வரலாற்றின் மீதினிலும் உறுதி!

விழி மூடி இங்கு துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதினிலும் உறுதி!

இழிவாக வாழோம் தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!

 

எமது சுகந்திரம் வேண்டி இந்த உலகத்தை துறந்து இனிமையான உணர்வுகளை துறந்து  மண்ணுக்காக எம் மக்களுக்காக எம் மக்களின் வாழ்விற்காக தங்கள் உயிர்களையும் ஈர்ந்த மாவீரர்களுக்காக நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவில் ஒக்‌ஷ்பேட் நகரிலே உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரித்தானிய கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருமியமும் வணிக முயற்சிகளின் பிரதி அமைச்சர் வடிவேலு சுரேந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடந்து தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்பட தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நிதி துறையின் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் போராளி மலரினி ஏற்றி வைத்தார்

அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையனியின் சிறப்பு தளபதி ஜெயார்த்தன் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட ஏனையோரும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் அமைச்சர் மதிப்பிற்குரிய  பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வாசித்தார். அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் தடா சந்திரசேகரன்  அவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞ்ஞர் எழில் சந்திரசேகர் (இந்தியா) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதனை தொடர்ந்து எழுச்சி பாடல்கள், நடனம், பேச்சு, கவிதை, என ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வினை புரட்சி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், முன்னால் போராளிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

அங்கு வந்திருந்த அனைவரிடமும் தமது சொந்த மண்ணில் வந்து தமது பிள்ளைகள் உறவுகளுக்கு  தமது கண்ணீர் அஞ்சலியினை செலுத்திய உணர்வினை காணக்கூடியதாக இருந்தது.

ஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒன்றாகும்.

எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ஊடகப்பிரிவு, நா.க.த.அ

பிரித்தானியா

Leave a Reply

Your email address will not be published.