தாயக மக்களுக்கு உறுதுணையாக புலம்பெயர் தேசத்தில் அணிதிரண்ட தமிழர்கள் !

தாயக மக்களுக்கு உறுதுணையாக புலம்பெயர் தேசத்தில் அணிதிரண்ட தமிழர்கள் !

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதிவழி மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக புலம்பெயர் தேசங்களில் சமபொழுதில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீளத்தரக் கோரியும், சிறிலங்கா படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை வேண்டியும் தமிழர் தயாகமெங்கும் பரவலாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இம்மக்கள் போராட்டங்களுக்கு தோழமை தெரிவித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் ஒன்றினை அரசவையில் நிறைவேற்றியிருந்தது.

இத்தீர்மானத்து அமைய, கடந்த 12ம் நாள திங்கட்கிழமை, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா என பல இடங்களில் சமபொழுதில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

லண்டனில் பிரித்தானிய பிரதமர் வாயில் தளத்திலும், கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் பாராளுமன்றத்துக்கு முன்னாலும், அமெரிக்காவில் நியு யோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபைக்கு முன்னாருலும் இப்போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் இன்றைய காலகட்டத்தில் அறவழியிலான தொடர்ச்சியான அரசியற் போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாயந்தவை என தெரிவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மக்கள் தாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அனைத்துலகமயப்படுத்தவும்; தமது அறக்கோபத்தினை வெளிப்படுத்தவும் இத்தகைய போராட்டங்கள் பெரிதும் துணை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் செய்ய முயலும் பாசாங்கு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தவும் இத்தகைய அறப்போராட்டங்கள் துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல எந்தவொரு இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் சாதகமான புறச்சூழலை அறப்போராட்டங்கள் உருவாக்கித் தர வல்லவை. ஆயுதப்போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறு இராஜதந்திரக் கதவுகளைத் திறந்து உதவினவையோ அதேபோல எழுச்சிகரமான அறப்போராட்டங்கள் இராஜதந்திரத் தளத்தில் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடக்கூடிய ஆற்றல் கொண்டவை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நாதம் ஊடகசேவை