ஓவியர் வீர சந்தானம் ஐயாவுக்கு தமிழகஅரசு மாண்பினை வழங்க வேண்டும்  :  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

ஓவியர் வீர சந்தானம் ஐயாவுக்கு தமிழகஅரசு மாண்பினை வழங்க வேண்டும்  :  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

மறைந்த ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களுக்கு

தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பெரும் பணிக்குரிய மாண்பினை தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் சமூகத்தால் பெரும் இடத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதொரு கலைஞர். ஐயாவின் சிறப்புக்கென அரச மாண்பேற்றப்பட வேண்டியதொரு கலைஞர் அவர். தமிழ்நாடு அரசாங்கம் இவருக்குரிய மதிப்பினை உரிய முறையில் தனது செயற்திட்டம் ஒன்றின் ஊடாக வழங்க வேண்டும் என நா. தமிழீழ அரசாங்கத்தின் இரங்கில் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரங்கல் அறிக்கையின் முழுவிபரம் :

தமிழர்களின் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அற்புதமான ஓவியங்களைப் படைத்த ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்கள் காலம் ஆகிய சேதி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அப் பெரும் கலைஞருக்கு சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துவதுடன் அவர் பிரிவால் பெருந் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைஞர்கள் மற்றும் உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

ஓவியர் வீர சந்தானம் அவர்கள் ஓர் அற்புதமான கலைஞர். ஓவியக்கலையில் தனக்கென்றதோர் தனித்துவமான பாணியை வகுத்து பல சிறப்பான ஓவியங்களை வழங்கியர். தனது படைப்புகளின் ஊடாகத் தமிழர்களின் ஓவியக்கலைக்குச் சிறப்புச் சேர்த்தவர். ஓர் ஓவியக்கலைஞராக மட்டுமன்றி ஓர் அருமையான நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியவர். ஒரு சிறந்த கலைஞர் என்பதற்கும் அப்பால் மிகுந்த மனித நேயம் மிக்கவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடன் இணைந்து நின்ற ஒரு சமூகநீதிப் போராளியாகவும், தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயத்தில் உறுதியான உரிமைக்குரல் எழுப்;பிய செயல்வீரனாகவும் அவர் விளங்கினார்.

ஈழத் தமிழ் மக்கள் மீது பேரன்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது பற்றுறுதியும் கொண்டவராக வீர சந்தானம் ஐயா அவர்கள் இருந்தார். தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான வெளிப்பாடுகளில் சந்தானம் ஐயா அவர்களின் ஓவியங்கள் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சிற்பங்களுக்கு உயிர் கொடுப்பதில் வீரசந்தானம் ஐயா அவர்களது ஓவியங்களின் பங்களிப்பு அனைவராலும் விதந்துரைக்கப்பட்டு வருகிறது. ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதிலும், தனக்குச் சரியென்றுபடுவதனை எவர் முன்பும் ஆணித்தரமாக எடுத்து முன்வைப்பதிலும் ஓர் அச்சமற்ற மனிதராக அவர் இருந்திருக்கிறார். ஓர் உண்மையான மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார்.

வீர சந்தானம் ஐயா அவர்கள் தமிழர் சமூகத்தால் பெரும் இடத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதொரு கலைஞர். அவரது சிறப்புக்கென அரச கௌரவம் வழங்கப்பட வேண்டியதொரு கலைஞர் அவர். தமிழ்நாடு அரசாங்கம் இவருக்குரிய மதிப்பினை உரிய முறையில் தனது செயற்திட்டம் ஒன்றின் ஊடாக வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை இத் தருணத்தில் நாம் முன்வைக்கிறோம். தமிழீழ அரசு உதயமாகும் போது வீர சந்தானம் ஐயா அவர்களுக்கு உரிய மதிப்பை தமிழர்களின் அரசு என்ற நிலையில் இருந்து வழங்கும் என்ற செய்தியையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை