இலங்கை இந்திய முப்பது ஆண்டுகள்: கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள் !!

இலங்கை இந்திய முப்பது ஆண்டுகள்: கேள்விக்கு உட்படுத்திய தமிழக வள அறிஞர்கள் !!

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு முப்பது ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து தமிழகத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் சரசுவதி, அ.தி.மு.க. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தோழர் தியாகு ஆகிய வளப்பிரதிநிதிகள் காரசாரமான கருத்துக்களை இந்த ஒப்பந்தம் தொடர்பில் முன்வைத்தனர்.

இந்தியஇலங்கை ஒப்பந்தத்தில், தோற்றது ஒப்பந்தமா? அல்லது இந்தியப் பாதுகாப்பா?’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்த இக்கருத்தரங்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் தமிழக தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த இந்த கருத்தரங்கினை இந்திய உளவுத்துறையினரும் தீவிரமாக கண்காணித்திருந்துள்ளனர்.

ஒப்பந்தம் கடந்த யூலை29ம் நாள் 30 ஆண்டுகளைத் தொட்டிருந்த நிலையில் காரசாரமான கருத்துக்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள இக்கருத்தரங்கம் தொடர்பில் தமிழக ஊடகமொன்றின் பார்வை இவ்வாறு அமைந்துள்ளது :

இலங்கையில் நடந்த இனப்படுகொலைச் சம்பவத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் யாராலும் மறக்க முடியாது. தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போடப்பட்டதுதான் ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலன்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், அதில் சொல்லப்பட்ட அம்சங்களை நிறைவேற்றியுள்ளதா இலங்கை அரசு? உண்மையில் அந்த ஒப்பந்தம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. அது, விடுதலைப்புலிகளின் சாம்ராஜ்யத்தை அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக பல்வேறு கருத்துகள் கிளம்பின.

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், ‘ஈழ வரலாற்றில் ஜூலை மாதம் என்பதே கறுப்பு மாதம்தான். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதும் இதே ஜூலை மாதத்தில்தான். அதுபோல இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக போடப்பட்ட ராஜீவ்காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டதும் ஜூலை மாதத்தில்தான். அந்த ஒப்பந்தத்தால் இன்றுவரை தமிழ் மக்களுக்கு ஒருபயனும் இல்லை.

நடந்தது எல்லாமே தமிழர்கள் மீதான இனப்படுகொலை மட்டுமே. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தையொட்டி, இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில் ‘மாகாண சபைகளுடன் அதிகாரப்பகிர்வு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இணைப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி அந்தஸ்து, இலங்கை ராணுவம் திரும்பிச் செல்தல், இந்திய நலன்களுக்கு எதிராக அந்நிய நாடுகளின் திட்டங்களுக்கு இலங்கையில் இடம் கொடுக்கக்கூடாது போன்றவை அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்று, அதற்கான சட்டத்திருத்தம் இலங்கையில் செய்துகொள்ளப்பட்டது.

ஆனால் இந்த அம்சங்கள் எல்லாம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இன்னமும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சுதந்திரமும், வாழ்வாதாரமும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த சட்டத்திருத்தத்தில் சொல்லியிருப்பதுபோல ‘இந்தியாவுக்கு எதிராக அந்நிய நாடுகளின் திட்டங்களுக்கு இலங்கையில் இடம் கொடுக்கக்கூடாது’ என்ற அம்சத்தையும் இலங்கை தொடர்ந்து மீறி வருகிறது.

தற்போது இந்தியாவின் அரசியல் மற்றும் பூகோள நலன்களுக்கு எதிராக சீனா எடுத்துவரும் முயற்சிகள் அனைத்துக்கும் இலங்கை முழு ஆதரவளிப்பதுடன், அந்நாட்டை களமாக சீனா பயன்படுத்த இடம்கொடுத்து வருகிறது. வருங்காலத்தில் இந்தியாவுக்கு இது மிகப்பரிய தலைவலியாகவும், ஆபத்தாகவும் மாறிவிடும்.

சீன ராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கும் அந்நாடு இடமளித்துள்ளது. சீனாவின் ‘ஒரு சாலை ஒரு இணைப்பு’ எனும் வியூகத்தையும் இலங்கை அரசு ஆதரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா இலங்கைக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அளித்துவரும் ஆதரவை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழலில், இந்தியாவுக்கு இருக்கும் ஆதரவு என்றால், அங்கு தமிழக மக்கள் நலமுடன் இருப்பது மட்டுமேயாகும். எனினும், தமிழர்கள் அதிகாரத்தில் இருந்தால்தான் இந்தியாவுக்கு எதிராக சீனாவும், பாகிஸ்தானும் காய்நகர்த்துவதை தடுக்க முடியும். இந்தியாவின் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க, இந்தியா முழு முயற்சி எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர். இந்தக் கருத்தரங்கில் மேலும் பல கருத்துகளும் விவாதிக்கப்பட்டன.

நாதம் ஊடகசேவை